Monday, March 7, 2011

ராமச்சந்திரனுக்கு ஒரு இச்


கன்னட பிரபலமான ஸ்ரீமாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் "சென்ன பசவ நாயக்கன்" நாவலை, தமிழில் மொழி பெயர்த்தவர் திரு. ஹேமா ஆனந்த தீர்த்தன்.

ஓரளவு தமிழ் வாசிக்கத் தெரிந்தவரான ஐயங்கார்,  மொழி பெயர்ப்பின் கையெழுத்து பிரதியை வாங்கிப் பார்த்துவிட்டுக் கேட்டாராம்.

"என்ன ராமசந்திர மூர்த்தியைப் பற்றி எழுதும் போது, நடுவில் ஒரு இச் சேர்த்து ராமச்சந்திர மூர்த்தி என எழுதுகிறீர்கள். அது தவறல்லவா..?" என்று கேட்டிருக்கிறார்.

"தமிழில் எல்லோரும் அப்படித்தான் எழுதுகிறார்கள். அதுதான் வழக்கம்..!" என்று ஹேமா ஆனந்த தீர்த்தன் சொல்லிவிட, அய்யங்கார் அரை மனதுடன் ஒத்துக்கொண்டாராம்.

பிறகு, ஹேமா ஆனந்த தீர்த்தன் பல பத்திரிக்கைகளையும் கவனித்த போது தான் தெரிந்தது.

அத்தனை பத்திரிக்கைகளிலும், எல்லோர் எழுதிய இடத்திலும் "ராமச்சந்திரன்" என்றே இருந்தது.

என்றாலும், ராஜாஜி அவர்கள் எழுதிய எல்லா நூல்களிலும், எல்லா இடங்களிலும் "ராமச்சந்திரன்"-ஐ  இச் இல்லாமல், "ராமசந்திரன்" என்றே எழுதியிருந்தாராம்.
.
.
.

Friday, February 25, 2011

ஹிட்லரின் கருணை

ஜெர்மனி ஹிட்லர் ஆட்சியில் இருந்தபோது நடந்தது இது.

ஹிட்லரைக் கொல்ல சதி செய்ததாகச் சொல்லி, எதிர்ப்பாளர்கள் பலரையும் கைது செய்து சிறையில் தள்ளிக் கொண்டிருந்தார் ஹிட்லர்.

அவர்களில் ஒரு பகுதியினரை சித்திரவதை செய்து கொல்லவும், மற்றவர்களை சுட்டுக் கொல்லவும் உத்தரவிட்டார் ஹிட்லர்.

சுட்டுக் கொல்லப்பட வேண்டிய லிஸ்டில் ஒருவராய் இருந்தவர் ஜெனரல் ரோமல்.

ஹிட்லரின் ஆரம்ப காலங்களில் ஹிட்லரோடு சேர்ந்து போராடியவர் அவர்.
எனவே, அவரை நேரில் கண்டபோது ஹிட்லர் சொன்னார்.

"நான் ஜெனரல் ரோமலுக்கு கருணை காட்டலாம் என்று நினைக்கிறேன்..!".

ஹிட்லர் சொன்னதும் அருகில் இருந்த ஒருவர் கேட்டார்.

"அப்படியானால், இவரை விடுதலை செய்து விடலாமா..?".

கேட்டவரை திரும்பிப் பார்த்த ஹிட்லர் சொன்னார்.

"அவரை சுட்டுத்தள்ள வேண்டாம்... தற்கொலை செய்து கொள்ள அனுமதியுங்கள்..!".
.
.
.

Wednesday, February 23, 2011

டார்வின் தியரி தப்பு

மங்கி ஃபால்ஸ்னு ஒரு இடம் இருக்கு... பொள்ளாச்சி பக்கத்துல.

தமிழில் குரங்கு அருவினு சொல்லுவாங்க.

கூட்டம் கூட்டமாய் குரங்குக இருக்கும் அங்க.

ரொம்ப நாளைக்கு முன்னாடி, குரங்குகள்ல பெருசுகள் கூடின இடத்துல ஒரு முக்கியமான விவாதம் சபைக்கு வந்தது.

அப்ப ஒரு குரங்கு அருவியில் குளித்துக் கொண்டிருந்த மனுஷங்களைப் பார்த்துட்டுக் இன்னொரு குரங்குகிட்ட கேட்டுச்சு.

"நம்மகிட்ட இருந்துதான் இந்த மனுஷப் பசங்க தோன்றுனாய்ங்கனு டார்வின் சொன்னதா சொல்றானுவ. ஆனா, எவனும் நம்ம மாதிரி அழகா இல்லியே..!".

அதைக் கேட்டதும் கோபமான ஒரு வயசாளிக் குரங்கு சொன்னது.

"சரி, டார்வின் அப்படிச் சொன்னாம்பா ஓகே.
ஆனா, குரங்கான நாம யாரும் மனைவியத் தள்ளி வைப்பது இல்லியே.
மனைவி மக்களை திக்கில்லாமல் தவிக்க விட்டு ஓடுறதில்லையே.
கள்ளக்காதல் கிடையாது.
கடத்தல் கிடையாது.
புகை பிடிப்பது, சூதாடுவது, குடிப்பது, கூத்தாடுவது கிடையாது.
எந்தக் குரங்கும் எண்பதாவது வயசுல நாலாவது கல்யாணம் பண்ணிக்கறது கிடையாது.
எந்த ஒரு குரங்கும் இன்னொரு குரங்கை துப்பாக்கியாலோ அணுகுண்டாலோ தாக்கி அழிச்சுக்கிறது கிடையாது.
அப்புறம் எப்படி மனுசனுக நம்மகிட்ட இருந்து தோன்றுனானு சொல்றனுகன்னு தெரியலையே.
எனக்கென்னவோ டார்வின் சொன்னது தப்புனுதான் தோணுது...!".

குரங்குக பேசிக்கிட்டு இருக்கறது எதுவும் தெரியாம, குரங்கருவில இன்னும் குளிச்சுட்டுத்தான் இருக்கானுக மனுசப் பயலுக.
.
.

Monday, February 21, 2011

சிவாஜி தலையிலே..


ஒரே வருடத்தில், இரண்டு முறை முடிசூடினார் மராட்டிய மன்னர் சிவாஜி.

காரணம் என்ன தெரியுமா..?

பிரபல சரித்திர அறிஞரான மகாமகோபாத்யாய போத்தரர் இது பற்றிக் குறிப்பெழுதி இருக்கிறார்.

மாமன்னர் சிவாஜி முதன்முதலில் மகுடம் சூடியது 1794ம் வருடம் 6ம் மாதம் 6ம் தேதி.

அந்த 8ம் தேதி, அவருடைய மனதுக்குகந்த தளபதியான பிரதாப்ராவ் குஜ்ஜார் மரணம் அடைந்தார்.

அதே 11ம் தேதி, அவருடைய மனைவி கேஷாபாய் காலமானார்.

அடுத்த 19ம் தேதி, மாமன்னர் சிவாஜியின் வீரத்தாய் ஜீஜாபாயும் இறைவனடி சேர்ந்தார்.

நிஸ்சல் பூரி என்னும் ஓர் அறிஞர் ஜாதகம் எல்லாம் கணித்துவிட்டு, "சிவாஜி பட்டம் சூட்டிய நாள் சரியில்லை..!' என்று காரணம் கூறி, வேறொரு நல்ல நாளில் மறுமுடி தரிக்கச் சொல்ல.....

எண்பது நாட்கள் கழித்து...

 இன்னொரு நன்னாளில், இரண்டாம் தடவையாக மீண்டும் முடிசூடிக் கொண்டாராம் மாமன்னர் சிவாஜி.
.
.
.

Friday, February 18, 2011

பயங்கரக் கதை

மெஷோகிஸ்ட் (Mesochist) என்பது தன்னைத் தானே வருத்திக் கொண்டு இன்பம் காண்போருடைய வியாதியின் பெயர்.

இந்த வியாதிக்கு இந்தப் பெயர் வரக் காரணம் Count Leepold von socher-masoch என்னும் ஒரு எழுத்தாளர் என்பதுதான் ஆச்சர்யமான விஷயம்.

அதைவிட ஆச்சர்யம் அவருக்கு இந்த வியாதி வருவதற்கான காரணம், சின்ன வயதில் அவர் அம்மா சொன்ன கதைகள் என்பதுதான்.

ஆஸ்ட்ரிய நாட்டு நிலப் பிரபுவான அவர் தனது தாயிடம் தாய்ப்பால்கூடக் குடிக்காமல், வாடகைத் தாயிடம் குடித்து வளர்ந்தவர் என்பதும் ஒரு செய்தி.

சின்ன வயதில் அவருடைய அம்மா சொன்ன பயங்கரக் கதைகளைக் கேட்டு வளர்ந்த அவர், மனச்சிதைவுக்கு ஆட்பட்டு மனம், உடல் என இருபக்கமும் தன்னைத்தானே துன்புறுத்திக் கொண்டு, அதில் இன்பம் காண ஆரம்பித்தார்.

அதனாலேயே, தன்னைதானே வருத்திக் கொள்ளும் வியாதிக்கு மெஷோகிஸம் என்று பெயர் வந்தது.

இது சைக்கோ, சாடிஸ்ட் எனப்படும் அடுத்தவரை துன்புறுத்தி இன்பம் காணும் வியாதிக்கு நேரெதிராகும்.

ஒருமுறை மெஷோகிஸ்ட்டும் சாடிஸ்ட்டும் சந்தித்தபோது, மெஷோகிஸ்ட் சாடிஸ்ட்டைப் பார்த்து,"என்னை அடி..!" என்று சொன்னாராம்.

அதற்கு அடுத்தவரை துன்புறுத்தி இன்பம் காணும் அந்த சாடிஸ்ட் சிரித்தபடி,"மாட்டேன்...!" என்றாராம்.
.
.
.

Thursday, February 17, 2011

பாரதிக்கு தமிழ் தெரியாது

(ஒரு வார்த்தைக்கு தமிழாக்கம் தெரியாமல் கஷ்டபட்டபோது பாரதி எழுதியது இது. நம்பமுடிகிறதா..?).



"மெம்பர்" என்பதற்கு சரியான தமிழ்ச் சொல் எனக்கு அகப்படவில்லை.

இது, ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

'அவயவி' சரியான வார்த்தை இல்லை.

'அங்கத்தான்' கட்டி வராது.

'சபிகன்' சரியான பதம் தான். ஆனால், பொது ஜனங்களுக்குத் தெரியாது.

யாரேனும் பண்டிதர்கள் நல்ல பதங்கள் கண்டுபிடித்துக் கொடுத்தால், புண்ணியம் உண்டு.

அரை மணி யோசித்தேன்.

'உறுப்பாளி?' - எதெல்லாமோ நினைத்தேன்.

ஒன்றும் மனத்திற்குப் பொருந்தவில்லை.


கடைசியாக 'மெம்பர்' என்றே எழுதிவிட்டேன்.

இன்னும் ஆற அமர யோசித்துச் சரியான பதங்கள் கண்டுபிடித்து, மற்றொரு முறை சொல்லுகிறேன்.



-பாரதியார் வாக்கு